Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

23.4.11

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanctuary

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் - அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது. 




இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.


இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 




புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.


இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன. 




இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன.  மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர். 


எப்படி செல்வது?

  • ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில். 
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம். 

2.5.10

சென்னை கடற்கரை - புகைப்படங்கள்

























.
.

மெரினா கடற்கரை - Marina Beach

மெரினா கடற்கரை சென்னையில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.  இந்த கடற்கரை கிட்டத்தட்ட 12 கி.மீ நீளம் உடையது.  உலகிலேயே மிக நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.




சென்னைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கும் இடமாக திகழ்கிறது இந்த மெரினா கடற்கரை.   இந்த கடற்கரை தண்ணீரிக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம்.  தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி, பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம்.  என்னதான் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் இன்றுவரை குளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.  






சென்னை மாநகராட்சி 2008 ஆம் ஆண்டில் கடற்கரை சீர்சிருத்தும் பணியை மேற்கொண்டு பல கோடிகள் செலவிட்டு கடற்கரையை அழகுபடுத்தியிருக்கிறது.    ஸ்கேடிங் செய்ய வசதியாக காந்தி சிலைக்கு பின்னால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர் 2005ஆம் ஆண்டு ஒன்றரை கோடி செலவில் மெரினா கடற்கரையோரம் பெரிய நீர்விழ்ச்சி ஒன்றும் அமைக்கப்பட்டது.




இரண்டாம் உலகத் தமிழ மாநாட்டிற்கு பின்னர் கடற்கரையோரம் ஆங்காங்கே தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களின் சிலைகள் நிறுவப்பட்டது. 


கடற்கரையோரம் உள்ள சிலைகள் :  உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, திருவள்ளுவர், அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், வ.உ.சிதம்பரனார், பாரதியார், பாரதிதாசன், சுபாஷ் சந்திர போஸ், அன்னி பெஸண்ட், காமராஜர், பெரியார், சிவாஜி போன்ற பல சிலைகளை காணலாம்.


தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான் எம்.ஜி.ஆர், சி.என்.அண்ணாதுரை ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் கடற்கரையோரம் இருவரின் சமாதியும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. 


காந்தி சிலைக்கு அருகில் கலங்கரை விளக்கமும், கடற்கரைக்கு அருகில் மீன் அருங்காட்சியாகமும், மெரினா நீச்சல் குளமும் அமைந்துள்ளது.  அவ்வப்போது கடலில் இருந்து இனப்பெருக்கம் செய்ய வெளியே வரும் ஆலிவ் ரிட்லீக்களை பாதுகாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் காணலாம்.  


காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சிரிப்பவர்கள்(laughers club), மாலையில் காதலர்கள், சிறுவர்கள் என பெரியவர் முதல் சிறியவர் வரை பல பேர் இங்கு வந்து செல்கின்றனர்.


எப்படி செல்வது?
சென்னை மாநகராட்சி பேருந்துகள் மூலம் மெரினா கடற்கரைக்கு செல்லலாம்.


1)சென்னைக்கு பல பேருந்துகள் உண்டு
2)சென்னையில் பல ரயில் நிலையங்கள் உள்ளன.
3)சென்னையில் விமான நிலையமும் உண்டு



.

4.4.10

தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Marine National Park

பல உயிரினப் பூங்காக்களுக்கு சென்றிருப்போம்! கடல் வாழ் உயிரினப் பூங்காவுக்களுக்கு என்றாவது சென்றதுண்டா? ஆம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.  


இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இதுவரை இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இங்கு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 560 சதுர கி.மீ பரப்பளவில் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாப் பகுதியில் நீண்ட கடற்கரையோரம் இந்த பூங்கா அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவின் மொத்தப் பரப்பளவு 10,500 சதுர கி.மீ , அதில் 560 சதுர கி.மீ பரப்பளவை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காவாக செயல்படுகிறது. இந்த பகுதியில் இருக்கும் 125 கிராமங்களில் வசிக்கும் மரைக்காயர் என்னும் பிரிவைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கும் உயிரினங்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் இந்த பகுதியில் வாழும் பல உயிரினங்கள் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தமான செய்தி.


இந்த மன்னார் வளைகுடா இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் தென்கிழக்கு முனையும், இலங்கை கடற்கரைக்கும் இடையில் 160 கி.மீ முதல் 200 கி.மீக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் இந்த வளைகுடாவில் வந்து சேர்கிறது. 1986 ஆம் ஆண்டு இந்த வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காக்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவும் அதைச் சுற்றியுள்ள 10 கி.மீ பகுதியும் biosphere resereve ஆக அறிவிக்கப்பட்டது.


21 தீவுகளின் பெயர்கள்:
1) வான் 2)கோஸ்வரி 3)விலங்குச்சாலி 4)கரியாச்சாலி 5)உப்புத் தண்ணி 6)புலுவினிச்சாலி 7)நல்ல தண்ணி 8)அனைப்பர் 9)வலி முனை 10)பூவரசன் பட்டி 11)அப்பா 12) தலரி 13)வலை 14)முள்ளி 15)முசல் 16)மனோலி 17)மனோலி புட்டி 18)பூமாரிச்சான 19)புலிவாசல் 20)குருசடை 21)சிங்கலம்


முன்னர் பாண்டியன், புன்னையடி என்ற இரு தீவுகளையும் தூத்தூக்குடியில் துறைமுகம் கட்டுவதற்காக அழித்துவிட்டனர். இல்லையெனில் அதுவும் இந்தப் பூங்காவில் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.


இந்த பூங்கா பலருக்கு ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது. நாம் இதுவரை நேரில் கண்டிராத பல வகையான உயிரினங்களை இங்கு கண்டு களிக்க முடியும். ecosystem என்று அழைக்கப்படும், உயிரினங்கள் வாழத்தகுந்த பவளப் பாறைகள், கடற்கரைகள், தீவுகள், மாங்குரோவ் வகைக் காடுகள் போன்றவை இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன். இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல இங்கு வாழும் மக்களால் சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.


இங்கு பல அரிய சிறப்புமிக்க கடல் தாவரங்கள் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பதினொன்று வகையான கடல் பாசிகளையும் ஒரே இடத்தில் இந்த பூங்காவில் காணமுடியும். வனத்துறையின் கணக்கெடுப்பின் படி 147 வகையான தேவையில்லா செடிகளும் இந்த பூங்காவில் இருக்கிறது.


உயிரினங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அரிய வகையான கடல் பசுக்கள், டால்பின்கள், கடற்குதிரைகள், பச்சை நிற கடல் ஆமைகள், பவள மீன்கள், சிங்க மீன்கள், ஆலிவ் ரிட்லி போன்ற பல வகை ஆமைகள், ஸீ-அனிமோன் போன்ற நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் பல உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கு இருக்கும் கடல் பாசிகளும் தேவையில்லா செடிகளும் கடல் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. இங்கு இருக்கும் பல ஆமைகள் அழிவை சந்திக்கும் நிலையிலும் மிக அபாயகரமானதாகவும் இருக்கின்றன.


கடல் வாழ் உயிரினப் பூங்காவான இந்த பூங்காவில் இடம்பெயரும் பறவைகளையும் காணலாம். சிலிகா ஏரி, காலிமோர் மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயரும் பல பறவைகளுக்கு இந்த பூங்கா சில நாட்கள் தங்குமிடமாகவும் பயன்படுகிறது. இப்படி இடம்பெயரும் பறவைகள் மட்டும் 180க்கும் மேற்பட்டவை. பல பறவைகள் தங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன.


இங்கு இருக்கும் மாங்குரோவ் வகைக் காடுகளில் இருக்கும் தாவரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அனைத்து தீவுகளில் மாங்குரோவ் வகைக் காடுகள் காணப்பட்டாலும், மனோலி தீவில் இருக்கும் காடுகளில் மற்ற காடுகளைக் காட்டிலும் அதிக அளவிலான தாவரங்கள் இருப்பது சிறப்பு. இங்கு வீசும் பலமான காற்றால் மரங்கள் அதிகம் வளர்வதில்லை, இருந்தாலும் மரங்கள் நல்ல நலத்தோடும், உறுதியானாதாகவும் இருக்கின்றன. இந்த மாங்குரோவ் காடுகள் முழுவதும் pneumatophores என்னும் மரங்களின் வேர்களால் சூழப்பட்டிருக்கின்றன. இந்த காடுகளில் திசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கள் பூத்துக் குழுங்கும்.


இங்கு இருக்கும் பாறைகளின் மதிப்புகளை அறிந்துகொண்டு பலர் இந்தப் பாறைகளை உடைத்துச் சென்றதால் பல பாறைகள் இன்று இல்லை. தமிழக வனத்துறையின் முயற்சியால் இப்போது பாறைகளை உடைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது நாள் ஒன்றுக்கு 250 மீ3 பாறைகள் இந்த வளைகுடாப் பகுதியில் இருந்து இயற்கைக்கு எதிராக செயல்படும் சிலரால் அகற்றப்படுகிறது. இயற்கை நமக்களித்த வரங்களை
 பாதுகாப்பது நமது கடமை, அதை விட்டுவிட்டு பல இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கும். இப்படி அழிக்கும் நாம் ஒரு நாள் இயற்கையின் ஆற்றலால், பேரழிவுகளால் அழியப்போகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


மாணவர்களுக்கும், உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மாங்குரோவ் காடுகளின் அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கும், வியக்கவைக்கும் கடல் உயிரினங்களை காணத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மன்னார் வளைகுடாவின் தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.


எப்படி செல்வது?


மன்னார் வளைகுடா இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு சென்று படகுகள் மூலம் மன்னார் வளைகுடாவை அடையலாம்.


1)மண்டபத்திற்கு இராமநாதபுரம், இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இருக்கின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - மண்டபம், தூத்துக்குடி.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை


உகந்த நேரம் - அக்டோபர் முதல் ஜனவரி வரை.





.

24.3.10

குற்றால அருவிகள் - kutralam falls

குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு.  இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம்.


குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது.  குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி!  மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த அருவி பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும் இந்த அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள்.  தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது. என்னதான் நாம் ஜூன் முதல் செப்டம்பர் வரை குற்றால சீசன் என்று கணித்தாலும் சில வருடங்கள் இயற்கை மாற்றத்தால் சீசன் நேரம் மாறுபடுகிறது. என்ன செய்வது, இயற்கையை மாற்ற முடியாது.  


குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.  இந்த ஒன்பது அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்படவேண்டாம். நமக்கு உதவ ஆட்டோக்கள் இருகின்றன. காலை தென்காசி அடைந்தவுடன், ஒரு காபி சாப்பிட்டு, எதாவது ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துவிட்டால் போதும், அனைத்து அருவிகளுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு உங்களை உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். (வீட்டுக்கெல்லாம் கொண்டுபோய் விடமாட்டங்க! நீங்க குற்றாலத்துல தங்குற இடத்துல கொண்டுபோய் விடுவாங்க)


குற்றாலத்தின் அழகை ரசித்து குளிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வேண்டும். குளிக்கிறதுக்கு 
இரண்டு நாள் வேணுமானு கேட்காதீங்க!  வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம,  ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா,  உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா? இந்த சுகத்தை எங்கெல்லாம் அனுபவிக்கலாமுன்னு பாப்போம்..


பேரருவி..
குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீர், தனது கவர்ச்சியால் சில உயிர்களைக் கூட பலிவாங்கியிருக்கிறது. பல நேரங்களில் செய்திகளில் எல்லாம் நாம் இந்த அருவியின் காட்சிகளை பார்த்திருக்கக் கூடும்.  உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது, ஆம் சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.  மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும். எனவே நீங்கள் இந்த அருவியில் குளிப்பதை அருவியே தீர்மானிக்கிறது.  அருவியே தீர்மானிக்குதுன்னா காவல் துறை தீர்மானிக்குதுன்னு அர்த்தம். இப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீர் மிக வேகமாக பாயும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் பாறையிலிருந்து பாயும்போது சில மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் சாரல் அடித்து நம் உடம்பை கூலாக்கி சந்தோஷப்படுத்தும்.


சிற்றருவி..
பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவிக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்


செண்பகாதேவி அருவி..
பேரருவிக்கு மேல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி.. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து இந்த அருவியை அடையவேண்டும். நடக்கணும், ஆட்டோ உள்ளே போகாது.. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.  இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்றாலும், காவல் துறை சொல்வதைக் கடைபிடித்தாலே நாம் இந்த அருவியில் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிக்கமுடியும். ஆனால் பல பேர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி உல்லாசமாய் குளிக்கிறேன் என்ற பேரில் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.


தேனருவி..
செண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.  மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது. 


ஐந்தருவி..
பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  திரிகூடமலையில் தோன்றி சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாக பிரிந்து பாய்கிறது.


பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி..
பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் பேரருவிபோல் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பழைய குற்றால அருவி..
தமிழகத்தில் எல்லாமே பழையது, புதியது என்று இருக்கும். உதாரணமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என்று இருப்பது போல.  இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல.  ஏனோ குற்றாலத்தையும் பழையது,புதியது என்று பிரித்து விட்டார்கள். பேரருவிதான் புதிய குற்றாலம்.  பழைய குற்றாலத்துக்கு முன்னர் அதிக அளவில் மக்கள் வந்திருக்கலாம், ஆனால் இப்போது பேரருவியில்தான் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த அருவி பேரருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேரருவி போலவே இங்கும் தண்ணீர் மிக உயரத்தில் இருந்து பாய்கிறது. கிட்டத்தட்ட பேரருவிபோலேயெ இருக்கிறது இந்த அருவி.


குளித்து முடித்து வந்தால் மிகவும் பசியெடுக்கும் என்பதை புரிந்து கொண்டு பல அருவிகளில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகம் நடைபெறுகிறது. குளித்து முடித்து பஜ்ஜி, சொஜ்ஜி என பலவற்றை வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு பின்னாளில் அவதிப்படாதீர்கள். குளித்தவுடன் ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு போய் படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.


தண்ணீர் அருவிகளில் சீசன் நேரங்களில் எந்நேரமும் பாய்வதால், சீசன் காலங்களில் இரவு 12 மணிக்கூட மக்கள் குளிக்கத் தயங்குவதில்லை. மது அருந்தி தண்ணீரில் குளிக்கும் இளைஞர் கூட்டமே இரவு நேரங்களில் காணப்படும், சில நேரங்களில் காலை நேரத்தில் இவர்களின் உயிரற்ற உடல்களே கிடைக்கும்.  குற்றாலத்தில் அதிகம் பலியாவது இளைஞர்களே! இவர்களின் உடல்களை கண்டெடுப்பதையே ஒரு தொழிலாக செய்துவருகிறார் குற்றாலத்தில் இருக்கும் கண்ணன் என்பவர். உயிர்கள் பலியாவது ஒருவருக்கு வேலை அளித்திருக்கிறது, என்ன உலகம் இது!


குற்றாலம் போனால் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள், காவல் துறை சொல்வதை கொஞ்சமாவது கேளுங்கள். உங்களின் உயிர் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.  


எப்படி போவது?
1)குற்றாலத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - தென்காசி 6 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 200 கி.மீ தொலைவில்

13.2.10

வைகை அணை - Vaigai dam


வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும்.


ஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உண்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது.  அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. 




ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது.  ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா "little brindavan" என்றே அழைக்கப்படுகிறது.


இந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜொலிக்கிறது. 


இங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை.  எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம்.  எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.


எப்படி செல்வது?
1)தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து பல பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் மற்றும் மதுரை
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை


கட்டணம்:
உள்நுழைய : ரூ.4
உல்லாச ரயில் - ரூ.10


நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. 


குறிப்பு : உல்லாச ரயில் நிலையம், மின் விளக்கு ஜொலிப்பது, தண்ணீர் பாய்வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே. 


அணையில் நீர் இருக்கும்போது படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யலாம், சுற்றுலாத் துறை செயல்படுத்துமா?  நீங்களும் இங்கு செல்லலாமே. 


உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்துவிடாதீர்கள். ஏதேனும் தவறு இருந்தாலும் தெரிவிக்கவும்.




.

19.1.10

ஒகேனக்கல் அருவி - Hogenakkal falls

ஒகேனக்கல் அருவி கர்நாடக எல்லையில், தர்மபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி இங்கு பாய்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலைப் பகுதியில் தோன்றி ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது.


மிகவும் ரம்மியமான சூழலும், இயற்கை காட்சிகளோடும் அமைந்துள்ள இந்த அருவிக்கு நீங்களும் செல்வதற்கு முன் பல தகவல்களை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.


ஒகேனக்கல் என்றால் கன்னடத்தில் புகை சூழ்ந்த பாறைகள் என்று பொருள்.  ஒகே(hoge) என்றால் புகை, கல்(kal) என்றால் பாறை. தண்ணீர் விழும்போது ஏற்படும் புகை பாறைகளில் இருந்து தோன்றுவது போல் இருப்பதால் இதற்கு ஒகேனக்கல் என்ற பெயர் ஏற்பட்டது.







பல இடங்களில் தண்ணீர் 20 மீ உயரத்தில் இருந்து விழுந்து சத்தத்தை ஏற்படுத்துகிறது.  இது அந்த பகுதியில் வித்தியாசமான சூழலை உருவாக்குகிறது. ஒகேனக்கலில் தண்ணீர் ஏரி போல் பல மைல்களுக்கு சூழ்ந்திருப்பதால் இங்கு பரிசல் போக்குவரத்தும் உண்டு. பல தமிழ் படங்களில் நீங்கள் கண்டது போல் நீங்களும் உல்லாசமாக பரிசலில் சென்று ஒகேனக்கலின் அழகை ரசிக்கலாம்.


நீங்களும் உங்கள் குடும்பத்தோடு சென்று அருவியில் குளிக்கலாம், அங்கு இருக்கும் மக்களிடம் எண்ணெய் தேய்த்து அருவியில் உல்லாச குளியலில் ஈடுபடலாம், அருவியில் மீன்களை பிடித்து சமைத்து விற்பவர்களிடம் மீனை வாங்கி ருசிக்கலாம்!!!!!!!!!


காவிரி ஆறு எப்போதும் இங்கு பாய்ந்து கொண்டிருப்பதால் வருடத்தில் எல்லா நாட்களும் இங்கு வரலாம். தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அருகில் உள்ள் சின்ன மிருக காட்சி சாலையையும் , முதலை பண்ணையையும் பார்வையிட மறந்து விடாதீர்கள்!!!!!!!!


ஆடி மாதம் 18ஆம் நாள் , அதாவது ஆகஸ்ட் மாதத்தில், நதிக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது....


ஒகேனக்கல் செல்வது எப்படி?
1) பெங்களுர் அல்லது சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக ஒகேனக்கல் வந்தடையலாம்.


2) சேலம், ஈரோடு , தர்மபுரி , பெங்களுர் போன்ற இடங்களில் இருந்து அரசு அல்லது தனியார் பேருந்துகள் மூலமாகவும் இங்கு செல்லலாம்.


3) தர்மபுரி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்தில் ஒகேனக்கல் 
செல்லலாம்.


தர்மபுரி வழியாக் செல்லும் சில ரயில்கள்:
1) Ernakulam exp(2677)
2) Kongu exp(2647)
3) Coimbatore exp(1013)
4) Mysore exp(6231)
5) Tuticorin exp(6732)


இந்த பதிவு யூத்பூல் விகடனில் குட் பிளாக்ஸில் இடம் பெற்றுள்ளது.  விகடனுக்கு நன்றி.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator