25.2.10

செட்டிநாட்டு வீடுகள் - பாகம் 2 - Chettinad Houses part 2

செட்டிநாட்டு வீடுகளை பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்..  இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.  இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.  இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது.  இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.


இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம்.  அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது.  இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை. 


வீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்?  அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம்.  உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.  


பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர்.  இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது.  எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும்  பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
வீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.


இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.  நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும்.  மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:
1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.


மீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.


1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.
போன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காகஇங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள்,  செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது..

23.2.10

செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Housesஎப்போதும் கோவில்கள், சரணாலயங்கள்,   அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே! வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி! இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும்  கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால்  கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை  அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின்  முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

போன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்!!). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.

இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.மேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)

இந்த வீடுகளைப் பற்றி இன்னும் சொல்லவேண்டியிருக்கிறது, செட்டிநாட்டு வீடுகள் அடுத்த பதிவிலும் இடம்பெறும்,  அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.

.

20.2.10

கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram

இன்று நாம் சோழர்கள் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  கங்கை கொண்ட சோழபுரம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தனது தலைநகரமாக ஆக்கினார்.


தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இந்தக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது முந்தைய இடுகையைப் பார்க்கவும்.தஞ்சையில் ஆண்மையின் வீரம் தெரிவது போல கங்கை கொண்ட சோழபுரத்தில் பெண்மையின் அழகும் மென்மையும் வெளிப்படுகிறது என்றே கூறலாம். ஒரு பெண் எப்படி மற்றவர்களை கவர்கிறாளோ அது போலவே இந்தக் கோவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.  அது எப்படி என நீங்கள் கேட்கலாம். அதாவது கோயில் விமான அமைப்பில் நேர் கோடுகள் இல்லாமல் நெளிவுகள் இருக்கின்றன.  தஞ்சையை விட இந்தக் கோவில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது என்பதும் இதற்கு ஒரு காரணம்.


இந்தக் கோயிலின் முகப்பு பகுதி மஹாதுவார் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தின் உயரம் 182 அடி. ஆனால் தஞ்சை விமானத்தைவிட சிறியது. விமானத்தில் எட்டு நிலைகள் இருக்கின்றன.  கோபுரத்தின் பல இடங்களில் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் பெண்மையை குறிக்கிறது.  இந்தக் கோவிலின் மூலம் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் கலைத்திறமையின் மூலம் அறியலாம்.


இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரிய கோவிலைப் போல் கட்ட எண்ணி உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கோவில்.  கடைசியில் பல மாற்றங்களோடும் பெண்மையோடும் உருவானதே இந்தக் கலைக் கோவில்.  கற்சிலைகளே இந்தக் கோவிலின் பொக்கிஷமாகும்.  பல பேர் இந்தக் கோவிலைக் கொள்ளையடித்ததாக கூறினாலும் சோழர்களின் பெருமையை நிலைநாட்ட கற்சிலைகள் கோவிலில் அணிவகுத்து நிற்கின்றன. இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது சிங்க கேணியும், ராஜராஜ சோழனுக்கு சிவனும் பார்வதியும் முடிசூட்டுவதும், நாட்டியமாடும் விநாயகரும், அர்த்தநாரிஸ்வரரும் ஆகும்.  இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதுவே சிங்க கேணியாகும். தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.


இந்தக் கோவிலின் சிவலிங்கம் 4 மீ உயரம் உள்ளது. அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காக தனி வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வாழ்க்கை வரலாறே இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறலாம். கோவிலில் பல இடங்களில் சோழர்களைப் பற்றிய அறிய தகவல்கள் இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன.  ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்து சோழர்களைப் பற்றி அறிவதற்கு பதிலாக இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள், அந்தப் படத்தில் இருப்பதை விட அதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 


கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.  அதை பாதுகாப்பது நமது கடமையும் கூட.  முடிந்தால் இங்கு சென்று வாருங்கள், கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.  
இங்கு செல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை. பல பேருக்கு இந்த இடுகையைப் பற்றி தெரியப்படுத்துங்கள், அவர்கள் செல்லட்டும். கடைசியாக ஒன்று தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.


எப்படி செல்வது?
1)தமிழகத்தின் பல இடங்களில் இருந்து அரியலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன


2)அரியலூரில் ரயில் நிலையமும் உள்ளது மேலும் விபரங்கள்

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 64 கி.மீ தொலைவில்.


வாசகர் விருப்பம் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய இடத்தைப் பற்றி என்னிடம் கேளுங்கள். 


.

18.2.10

திருமலை நாயக்கர் மஹால் - Thirumalai Nayakar Mahal

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி இன்று பார்க்கலாம்.  மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால்.  உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.


இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.  அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும்.  மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்.  பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை).  அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.  ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.


இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது.  மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது.  தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  


தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது.  தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.  இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
மதுரைக்கு செல்ல வழி சொல்ல வேண்டுமா என்ன? இருந்தாலும் சொல்கிறேன்.


1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)மதுரையில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள் 


3)மதுரையில் விமான நிலையமும் உள்ளது.


குறிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


கட்டணம்:
உள்நுழைய : ரூ.1


ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
பெரியவர் : ரூ.10
சிறுவர் : ரூ.5


நேரம்:
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்
 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.


ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
தமிழில் இரவு 8.15 மணிக்கு
ஆங்கிலத்தில் இரவு 6.45 மணிக்கு


.

13.2.10

வைகை அணை - Vaigai dam


வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும்.


ஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உண்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது.  அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. 
ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது.  ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா "little brindavan" என்றே அழைக்கப்படுகிறது.


இந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜொலிக்கிறது. 


இங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை.  எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம்.  எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.


எப்படி செல்வது?
1)தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து பல பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் மற்றும் மதுரை
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை


கட்டணம்:
உள்நுழைய : ரூ.4
உல்லாச ரயில் - ரூ.10


நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. 


குறிப்பு : உல்லாச ரயில் நிலையம், மின் விளக்கு ஜொலிப்பது, தண்ணீர் பாய்வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே. 


அணையில் நீர் இருக்கும்போது படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யலாம், சுற்றுலாத் துறை செயல்படுத்துமா?  நீங்களும் இங்கு செல்லலாமே. 


உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மறந்துவிடாதீர்கள். ஏதேனும் தவறு இருந்தாலும் தெரிவிக்கவும்.
.

6.2.10

ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் - Anaimalai Sanctuary

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் அல்லது ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். 
தமிழகத்தின் பிரபலாமான கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது இந்த சரணாலாயம்.
958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCOவின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.


2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்.
இந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன.  இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.

உங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.
இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள்.  குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.

இங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.

இங்கு எப்படி செல்வது?
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.


2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்


3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.
கோவை வழியாக செல்லும் ரயில்கள்:
1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381

கட்டணம்:
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10


நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

உணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:
The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001, 
Tamil Nadu.
Ph - 04259 25356


உங்கள் நேரத்தைக் கழிக்க நல்ல இடம். சென்று வாருங்களேன்.


இந்த பதிவு யூத்பூல் விகடனில் குட் பிளாக்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விகடனுக்கு நன்றி.

1.2.10

பத்மநாபபுரம் அரண்மனை - Padmanabapuram palace

கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான பத்மநாபபுரம் அரண்மனையை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.  கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான அரண்மனை.  1798 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மணை டிரவண்கோர் ஆட்சியாளர்களின் தலை நகரமாக இருந்தது.


இந்த அரண்மனை 1601 ஆம் ஆண்டு இரவிப்பிள்ளை இரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. மந்திர சாலை,  தை கொட்டாரம், நாடக சாலை,  நான்கு மாடி கட்டிடம், தெற்கு கொட்டாரம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அரசவையே மந்திர சாலை என்று அழைக்கப்பட்டது.
மந்திர சாலையின் ஜன்னல்கள் அழகிய வண்ணமயமான மைகாவால் கட்டப்பட்டது. மைகா வெயிலின் அளவை குறைக்கிறது. தரை தேங்காய் மூடிகளாலும், முட்டைகளாலும் ஆனது. தமிழகத்தில் இருந்தாலும் அரண்மனை கேரள கட்டிடக் கலையின் பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது. 


தை கொட்டாரம் பழமையான கட்டிடம் என்றே சொல்லப்படுகிறது. இந்த கொட்டாரத்தில் நாலுகட்டு, ஏகாந்த மண்டபம் போன்ற அமைப்புகளும் உள்ளன. சில தூண்கள் ஒரே பலா மரத்தால் மிகுந்த கலை வேலைப்பாட்டுடன பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கிறது. தெற்கு கொட்டாரம் 400 ஆண்டுகள் பழமையானது. இப்போது அருங்காட்சியமாக காணப்படுகிறது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது மாடி உப்பரிக்க மளிகா என்றழைக்கப்படுகிறது.


நீங்களும் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்று நமது முன்னோர்களின் கலைத் திறமையையும், கட்டிடக்கலையையும், பாரம்பரியத்தையும் , பிரம்மாண்டத்தையும் கண்டு களிக்கலாமெ!!!


எப்படி செல்வது என கேட்கிறீர்களா?
1)மிக அருகில் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளது. அங்கு சென்று அங்கிருந்து 87 கி.மீ பயணம் செய்தால் அரண்மனை உங்கள் முன்னே!!


2)கேரளா மற்றும் தமிழகத்தின பல பகுதிகளில் இருந்து ஏராளாமான பேருந்துகள் கன்னியாகுமரிக்கு இயக்கப் படுகின்றன.  அதன் மூலம் இங்கு செல்லலாம்.


3)கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் பல ரயில்கள் 
மூலமும் இங்கு சென்றடையலாம்.


கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில்கள்:
1)Kanyakumari exp - 2633
2)Thirukural exp - 2642
3)Himsagar exp - 6318
4)Kanyakumari exp - 2665
5)Mumbai - Kanyakumar exp - 6381
6)Kanyakumari exp - 6526


திறந்திருக்கும் நேரம்:  9.00 am - 1.00 pm , 2.00 pm - 4.30 pm
திங்கட்கிழமைகளில் செயல்படாது.


கட்டணம்:
பெரியவர் - ரூ.10 சிறுவர் - ரூ.2
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator