Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

25.5.11

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  



இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.




தல வரலாறு:
     மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள். 


தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.



கட்டிடக்கலை:
   மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைந்துள்ளனவாம்!! இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ. 

இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது.  மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.


மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது.  இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும். 

கோவிலில் உள்ள மண்டபங்கள்:
  • அஷ்ட சக்தி மண்டபம்
  • மீனாட்சி நாயக்கர் மண்டபம்
  • ஊஞ்சல் மண்டபம்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • வசந்த மண்டபம்
  • கம்பத்தடி மண்டபம்
  • கிளிக்கூடு மண்டபம்
  • மங்கையர்க்கரசி மண்டபம்
  • சேர்வைக்காரர் மண்டபம் 
இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

சிற்பக்கலை: 
        ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.  வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன.  அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன.  இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.  


    கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன.  சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. 

திருவிழாக்கள்:
   இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது.  ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 


  ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

எப்படி செல்வது?
  • மதுரைக்கு சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்து வசது உண்டு.
  • மதுரையில் ரயில் நிலையமும் உள்ளது(MDU)
  • மதுரையில் விமான நிலையமும் உள்ளது. விமான நிலையம், நகருக்கு வெளியில் அமைந்துள்ளது.

18.2.10

திருமலை நாயக்கர் மஹால் - Thirumalai Nayakar Mahal

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி இன்று பார்க்கலாம்.  மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால்.  உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.


இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.  அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும்.  மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்.  பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை).  அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.  ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.


இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது.  மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது.  தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  


தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது.  தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.  இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
மதுரைக்கு செல்ல வழி சொல்ல வேண்டுமா என்ன? இருந்தாலும் சொல்கிறேன்.


1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)மதுரையில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள் 


3)மதுரையில் விமான நிலையமும் உள்ளது.


குறிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


கட்டணம்:
உள்நுழைய : ரூ.1


ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
பெரியவர் : ரூ.10
சிறுவர் : ரூ.5


நேரம்:
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்
 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.


ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
தமிழில் இரவு 8.15 மணிக்கு
ஆங்கிலத்தில் இரவு 6.45 மணிக்கு


.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator