தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும்.
கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு:
இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.
பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார்.
சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது.
அமைவிடம்:
இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான்.
பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.
மூலவர் சிற்பம்:
இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார்.
அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி முருகனாக நமக்கு காட்சியளிக்கிறது.
பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.
சிறப்புகள்:
கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.
முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!
பூஜைகள் மற்றும் விழாக்கள்:
தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்:
- திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
- பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
- மாரியம்மன் கோவில்
- பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
- குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
- வேலப்பர் கோவில், கொடைக்கானல்.
வசதிகள்:
- வழிபாடு செய்ய ஏற்ற வகையில் பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன.
- முடிக்காணிக்கை செலுத்துவதற்கு அடிவாரத்தில் பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- பழநியின் சிறப்பான பஞ்சாமிர்தத்தை வாங்க மலையிலும் அடிவாரத்திலும் கடைகள் உள்ளன.
- பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப தண்டபானி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷால விடுதி, வேலவன் விடுதி ஆகியனவும் உள்ளன.
எப்படி செல்வது?
- பழநிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை, கொடைக்கானல், தாராபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல், 48 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 85 கி.மீ தொலைவில்.
மலையேறுவதற்கு படிக்கட்டுகள், யானைப் பாதை, வின்ச் ரயில், ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு: +91-04545-242236, 242467, 241417
முந்தைய பதிவில் கொடைக்கானலில் உள்ள சில இடங்களை பற்றி கூறியிருந்தேன். இந்தப் பதிவில் மீதமுள்ள இடங்களைக் காணலாம்.
தலையர் நீர்வீழ்ச்சி:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.
 |
| Thalaiyar falls |
குணா குகைகள்:
கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர். அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.
 |
Guna caves
|
Pine forest:
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
 |
| Pine forest |
பியர் சோழா அருவி(Bear shola Falls):
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
 |
| Bear shola falls |
Kodaikanal solar observatory:
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
 |
| Solar observatory |
திறந்திருக்கும் நேரம்
- காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
- சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
 |
| Pillar rocks |
பாம்பர் அருவி:
இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
 |
| Pambar falls |
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:
1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில்.
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.
 |
| Kurinji Andavar Temple |
செண்பகனூர் அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
 |
| Shenbaganur Museum |
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.
செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை
எப்படி செல்வது?
- கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில்
- அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.
மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 |
| Click to enlarge map |
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.
வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.
 |
| Silver Falls |
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.
இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.
 |
| Kodaikanal Lake |
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.
150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
 |
| Bryant Park |
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.
வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).
 |
| Coaker's walk |
டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது.
இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.
 |
| Dolphin's nose |
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
 |
| Suicide point |
அடுத்த பதிவிலும் கொடைக்கானல் தொடரும்..
திண்டுக்கல்லில் அமைந்திருக்கும் கோட்டையைப் பற்றிதான் இன்று சொல்லப்போகிறேன். இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் ஹைதர் அலி தன் மனைவியையும், மகன் திப்பு சுல்தானையும் ஆங்கிலேயரிடம் இருந்து பாதுகாக்க இங்கு தான் மறைத்து வைத்திருந்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.
இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.
இங்கு எப்படி செல்வது?
1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து திண்டுக்கலுக்கு பேருந்து வசதி உண்டு.
2)திண்டுக்கலில் ரயில் நிலையம் உள்ளது.
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 66 கி.மீ தொலைவில்.
இந்தக் கோட்டை archaeological survey of India வால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னர் இந்தக் கோட்டையை பல பேர் இடித்து கற்களை எடுத்துச் சென்றதால் இப்போது வேலி போட்டு பாதுகாக்கப்படுகிறது.
கட்டணம் :
இந்தியராய் உள் நுழைய : ரூ.5/-
வெளிநாட்டவராய் உள் நுழைய் : ரூ.100/-