ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் - அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது.
இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.
இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.
இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன.
இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன. மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர்.
எப்படி செல்வது?
- ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம்.
வல்லநாடு வெளிமான் சரணாலயம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வெளிமான்களால் பிரபலமடைந்தது. வெளிமான்கள் என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள். இந்த வகையான மான்களை தற்போது தமிழகத்தில் உள்ள நான்கு சரணாலயங்களில் மட்டுமே காணமுடியும்.
அதில் ஒன்றுதான் இந்த வல்லநாடு சரணாலயம். கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மற்ற மூன்று சரணாலயங்களிலும் வெளிமான்களை காணலாம். இந்த வல்லநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ளது.
இந்த சரணாலாயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம். 19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகையான வெளிமான்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டன, ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிளேயே உள்ளன. பெரும்பாலும் இந்த மான்கள் சமமான நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் சூழ்நிலை மாற்றங்களால் தற்போது காடுகளில் வசிக்கின்றன.
இந்த வகை மான்களின் முக்கிய உணவு புல், மேலும் இவை அதிகபட்சமாக 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும். வெளிமான் மட்டுமல்லாது இந்த சரணாலயத்தில் குரங்கு, புள்ளிமான், காட்டு பூனை, கீரிப்பிள்ளை, கருப்பு முயல், பாம்புகள் போன்ற விலங்குகளும் இங்குள்ளன.
மேலும் மயில், நாரை, சிட்டுக்குருவி, கழுகு, மரங்கொத்தி, குயில், மரகதப் புறா, பருந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.
தேடித்தேடி பறவைகளை புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த சரணாலயம் ஒரு நல்ல இடம். இன்னொரு தகவல்! - வருடத்தில் எந்த மாதம் நீங்கள் இங்கு சென்றாலும் வெயிலின் தாக்கத்தை உணரலாம். எனவே கோடை காலங்களில் செல்லாதீர்கள்.
எப்படி செல்வது?
- திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு பேருந்துகள் உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - திருநெல்வேலி, 16 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி, 25 கி.மீ தொலைவில்.


பல உயிரினப் பூங்காக்களுக்கு சென்றிருப்போம்! கடல் வாழ் உயிரினப் பூங்காவுக்களுக்கு என்றாவது சென்றதுண்டா? ஆம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இதுவரை இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இங்கு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 560 சதுர கி.மீ பரப்பளவில் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாப் பகுதியில் நீண்ட கடற்கரையோரம் இந்த பூங்கா அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவின் மொத்தப் பரப்பளவு 10,500 சதுர கி.மீ , அதில் 560 சதுர கி.மீ பரப்பளவை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காவாக செயல்படுகிறது. இந்த பகுதியில் இருக்கும் 125 கிராமங்களில் வசிக்கும் மரைக்காயர் என்னும் பிரிவைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கும் உயிரினங்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் இந்த பகுதியில் வாழும் பல உயிரினங்கள் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தமான செய்தி.
இந்த மன்னார் வளைகுடா இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் தென்கிழக்கு முனையும், இலங்கை கடற்கரைக்கும் இடையில் 160 கி.மீ முதல் 200 கி.மீக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் இந்த வளைகுடாவில் வந்து சேர்கிறது. 1986 ஆம் ஆண்டு இந்த வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காக்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவும் அதைச் சுற்றியுள்ள 10 கி.மீ பகுதியும் biosphere resereve ஆக அறிவிக்கப்பட்டது.
21 தீவுகளின் பெயர்கள்:
1) வான் 2)கோஸ்வரி 3)விலங்குச்சாலி 4)கரியாச்சாலி 5)உப்புத் தண்ணி 6)புலுவினிச்சாலி 7)நல்ல தண்ணி 8)அனைப்பர் 9)வலி முனை 10)பூவரசன் பட்டி 11)அப்பா 12) தலரி 13)வலை 14)முள்ளி 15)முசல் 16)மனோலி 17)மனோலி புட்டி 18)பூமாரிச்சான 19)புலிவாசல் 20)குருசடை 21)சிங்கலம்
முன்னர் பாண்டியன், புன்னையடி என்ற இரு தீவுகளையும் தூத்தூக்குடியில் துறைமுகம் கட்டுவதற்காக அழித்துவிட்டனர். இல்லையெனில் அதுவும் இந்தப் பூங்காவில் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
இந்த பூங்கா பலருக்கு ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது. நாம் இதுவரை நேரில் கண்டிராத பல வகையான உயிரினங்களை இங்கு கண்டு களிக்க முடியும். ecosystem என்று அழைக்கப்படும், உயிரினங்கள் வாழத்தகுந்த பவளப் பாறைகள், கடற்கரைகள், தீவுகள், மாங்குரோவ் வகைக் காடுகள் போன்றவை இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன். இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல இங்கு வாழும் மக்களால் சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.
இங்கு பல அரிய சிறப்புமிக்க கடல் தாவரங்கள் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பதினொன்று வகையான கடல் பாசிகளையும் ஒரே இடத்தில் இந்த பூங்காவில் காணமுடியும். வனத்துறையின் கணக்கெடுப்பின் படி 147 வகையான தேவையில்லா செடிகளும் இந்த பூங்காவில் இருக்கிறது.
உயிரினங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அரிய வகையான கடல் பசுக்கள், டால்பின்கள், கடற்குதிரைகள், பச்சை நிற கடல் ஆமைகள், பவள மீன்கள், சிங்க மீன்கள், ஆலிவ் ரிட்லி போன்ற பல வகை ஆமைகள், ஸீ-அனிமோன் போன்ற நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் பல உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கு இருக்கும் கடல் பாசிகளும் தேவையில்லா செடிகளும் கடல் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. இங்கு இருக்கும் பல ஆமைகள் அழிவை சந்திக்கும் நிலையிலும் மிக அபாயகரமானதாகவும் இருக்கின்றன.

கடல் வாழ் உயிரினப் பூங்காவான இந்த பூங்காவில் இடம்பெயரும் பறவைகளையும் காணலாம். சிலிகா ஏரி, காலிமோர் மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயரும் பல பறவைகளுக்கு இந்த பூங்கா சில நாட்கள் தங்குமிடமாகவும் பயன்படுகிறது. இப்படி இடம்பெயரும் பறவைகள் மட்டும் 180க்கும் மேற்பட்டவை. பல பறவைகள் தங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன.
இங்கு இருக்கும் மாங்குரோவ் வகைக் காடுகளில் இருக்கும் தாவரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அனைத்து தீவுகளில் மாங்குரோவ் வகைக் காடுகள் காணப்பட்டாலும், மனோலி தீவில் இருக்கும் காடுகளில் மற்ற காடுகளைக் காட்டிலும் அதிக அளவிலான தாவரங்கள் இருப்பது சிறப்பு. இங்கு வீசும் பலமான காற்றால் மரங்கள் அதிகம் வளர்வதில்லை, இருந்தாலும் மரங்கள் நல்ல நலத்தோடும், உறுதியானாதாகவும் இருக்கின்றன. இந்த மாங்குரோவ் காடுகள் முழுவதும் pneumatophores என்னும் மரங்களின் வேர்களால் சூழப்பட்டிருக்கின்றன. இந்த காடுகளில் திசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கள் பூத்துக் குழுங்கும்.
இங்கு இருக்கும் பாறைகளின் மதிப்புகளை அறிந்துகொண்டு பலர் இந்தப் பாறைகளை உடைத்துச் சென்றதால் பல பாறைகள் இன்று இல்லை. தமிழக வனத்துறையின் முயற்சியால் இப்போது பாறைகளை உடைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது நாள் ஒன்றுக்கு 250 மீ3 பாறைகள் இந்த வளைகுடாப் பகுதியில் இருந்து இயற்கைக்கு எதிராக செயல்படும் சிலரால் அகற்றப்படுகிறது. இயற்கை நமக்களித்த வரங்களை
பாதுகாப்பது நமது கடமை, அதை விட்டுவிட்டு பல இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கும். இப்படி அழிக்கும் நாம் ஒரு நாள் இயற்கையின் ஆற்றலால், பேரழிவுகளால் அழியப்போகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கும், உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மாங்குரோவ் காடுகளின் அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கும், வியக்கவைக்கும் கடல் உயிரினங்களை காணத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மன்னார் வளைகுடாவின் தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.
எப்படி செல்வது?
மன்னார் வளைகுடா இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு சென்று படகுகள் மூலம் மன்னார் வளைகுடாவை அடையலாம்.
1)மண்டபத்திற்கு இராமநாதபுரம், இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இருக்கின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - மண்டபம், தூத்துக்குடி.
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை
உகந்த நேரம் - அக்டோபர் முதல் ஜனவரி வரை.
.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் அல்லது ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.
தமிழகத்தின் பிரபலாமான கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது இந்த சரணாலாயம்.
958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCOவின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம்.
2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ குணம் வாய்ந்தவை. இங்கு உள்ள கரிசன் சோழா என்னும் பகுதி மருத்துவ குணமுடைய செடிகளின் இருப்பிடமாக உள்ளது. ஒரு சின்ன மருத்துவமனையே இங்கு இருக்கிறது என்று கூட கூறலாம்.
இந்த வனவிலங்கு சரணாயத்தில் யானைகள், மான்கள், நீலகிரி தார், நரி, புலி, பல வகையான அணில்கள், கரடிகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இதுவரை பார்த்திறாத பல வகையான விலங்குகளும், பறவைகளும் இங்கு அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து சென்றுள்ளன.
உங்களின் யானை சவாரி ஆசையை இங்கு நிறைவேற்றிகொள்ளலாம். யானை என்றாலே பயம் என்றால் உங்களுக்காக வேன்களும் உள்ளன.
இங்கு செல்ல நல்ல நேரம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை. மழை காலங்களில் செல்லாதீர்கள். குறிப்பு: விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.
இங்கு தங்குவதற்கு குடில்களும் உள்ளன ஆனால் முன்பதிவு செய்யவேண்டும். பல வகையான குடில்கள் உங்கள் வசதிக்கேற்ப உள்ளன. சாப்பாடும் இங்கு தரப்படும், அதற்கும் முன்பதிவு செய்யவேண்டும்.
இங்கு எப்படி செல்வது?
1) பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 35 கி.மீ பயணம் செய்தால் இங்கு வந்தடையலாம்.

2) அருகில் உள்ள ரயில் நிலையம் - கோவை ,87 கி.மீ தொலைவில்
3) அருகில் உள்ள விமான நிலையம் - கோவை, 87 கி.மீ தொலைவில்.
கோவை வழியாக செல்லும் ரயில்கள்:
1) Nilagiri exp - 2671
2) Cheran exp - 2673
3) Trivandrum exp - 6321
4) Kanyakumari exp - 6526
5) Kerala exp - 2626
6) Kanyakumari exp - 6381
கட்டணம்:
உள் நுழைய - ரூ.50
புகைபடக் கருவி - ரூ.25
நிழல்படக் கருவி - ரூ.50
கார் - ரூ.10
நேரம் - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.
உணவு மற்றும் குடில்களை முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்:
The Wildlife Warden,
Indira Gandhi Wildlife Sanctuary & National Park,
176, Meenkarai Road, Pollachi,
Coimbatore 642001,
Tamil Nadu.
Ph - 04259 25356
உங்கள் நேரத்தைக் கழிக்க நல்ல இடம். சென்று வாருங்களேன்.
இந்த பதிவு யூத்பூல் விகடனில் குட் பிளாக்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விகடனுக்கு நன்றி.