Showing posts with label நவக்கிரகம். Show all posts
Showing posts with label நவக்கிரகம். Show all posts

12.2.12

திருவெண்காடு புதன் கோவில் - Thiruvenkadu Boothan Temple.

கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.  இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.


சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு. 


இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன. 

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது. 


திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம். 


நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.

புதனுக்கு உகந்தவை:



ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

எப்படி செல்வது?

இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

  • கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 96 கி.மீ தொலைவில்.

10.1.12

ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் - Alangudi Guru Temple

நவக்கிரக கோவில்களில் குரு பகவானுக்கு ஏற்ற கோவில் ஆலங்குடி ஆகும். இக்கோவிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும் - ஏலவார்குழலம்மையும் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார்.




தல வரலாறு:
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.


ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். 


தல சிறப்பு - கட்டிடக்கலை:
தேவார பாடல் பெற்ற தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் ”நச்சித் தொழுவீர்கள்...” என்று பதிகம் பாடினார். விசுவாமித்திரர்,  முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில். 




இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. மேலும் இக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் கலையம்சம் மிக்க சிற்பங்களை காணலாம். இங்கு கோவிலைச் சுற்றி அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் அமைந்துள்ளது.


குரு பகவானுக்கு உகந்தவை:

ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

காயத்ரி மந்திரம்:

விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
விழாக்கள்:
ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எப்படி செல்வது?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.
  • கும்பகோணத்தில் இருந்து இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம், 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி.

16.10.11

திங்களூர் சந்திரன் கோவில் - Thingaloor Chandran Temple

நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர் ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன். 


வரலாறு - கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலா வெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.
 


தல புராணம்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். 


ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.


தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.  இதுவே இக்கோவில் வரலாறாகும். 


சந்திரனுக்கு உகந்தவை:

ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்

காயத்ரி மந்திரம்:
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.


வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம். 


பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தொடர்புக்கு: 04362-262499

எப்படி செல்வது?
  • திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம். 
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில். 

9.10.11

சூரியனார் கோவில் - Sooriyanar Temple

நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும். இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார். 

வரலாறு:
இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.


கட்டிடக்கலை:
இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது.  இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன.


சிற்பக்கலை:
கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர்.  மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.


உகந்தவை:
ராசி : சிம்ம ராசி
அதி தேவதை : அக்கினி
நிறம் : சிவப்பு
தானியம் : கோதுமை
வாகனம் : ஏழு குதிரை பூட்டிய தேர்
உலோகம் : தம்பாக்கு
மலர் : தாமரை
ரத்தினம் : மாணிக்கம்
ஸ்தல விருட்சம் : வெள்ளருக்கு

காயத்ரி மந்திரம் :  
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்.

வழிபடும் முறை: 
கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.


மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று.

எப்படி செல்வது?
  • இக்கோவில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.  பேருந்து வசதிகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - ஆடுதுறை 2 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 123 கி.மீ தொலைவில்.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator