21.10.10

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் - Thiruvannamalai Arunachaleswarar temple

அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.  

வரலாறு:



மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.



மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.




பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 



கட்டிடக்கலை:
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம்.  கோவில் மிகப் பெரியது என்பதால் ஒவ்வொரு பிரகாரத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை இனி காண்போம். 

ஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.

ஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம். 

நான்காம் பிரகாரம்:


 கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம்,  சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர்,  பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். 




மூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம். 

இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது. 


முதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது. 

சிற்பக்கலை:
இங்கு உள்ள கிழக்கு கோபுரத்தில் நடன சிற்பங்களை காணலாம்.  மேலும் இந்தக் கோவிலில் இருந்து ஏராளமான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 119 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

தல வரலாறு: 
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை. 

பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார். 

சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. இந்த தவற்றிற்காக காஞ்சிபுரத்தில் மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டார் பார்வதி. அச்சமயத்தில் சிவபெருமான் தோன்றி அவரை திருவண்ணாமலைக்குச் சென்று வழிபடும்படி பணித்தார். அங்கு பவளக் குன்றில் கெளதம முனிவரின் உதவியோடு பார்வதி மேற்கொண்ட தவத்தை மஹிசாசுரன் என்னும் அரக்கன் தடுத்தான். இதனால் கோபமுற்ற பார்வதி துர்கை வடிவம் கொண்டு அவனை அழித்தாள். பின்னர் சிவபெருமான ஜோதி வடிவில் பார்வதிக்கு காட்சி தந்து பார்வதிக்கு தன் உடம்பின் இடப்பக்கத்தை தந்து அர்த்தநாரியாக மாறினார் என்றும் கூறப்படுவதுண்டு.  

கிரிவலம்: 
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது.  மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை. இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு. 




14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும்  உள்ளன. மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம்.  இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.

சிறப்புகள்:
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. 

அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை.  மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம்.

அப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து திருவெம்பாவையையும், திருஅம்மானையையும் இயற்றினார் என்று சொல்வர்.  

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம். 


விழாக்கள்: 
அனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம்,  ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம்,  நவராத்திரி,  தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. 

சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப உற்சவமும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது போன வ்ருடம்(2009) முப்பது லட்சம் மக்கள் திரண்டு ஜோதி வடிவான அண்ணாமலையாரை வழிபட்டனர். 

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 

தங்கும் இடங்கள்: 
எங்கும் காணாத வகையில் இங்கு கோவிலிலேயே தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு உள்ள அப்பர் இல்லத்தில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாயும், உண்ணாமுலை அம்மன் இல்லத்தில் தங்குவதற்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. 

எப்படி செல்வது?
1) திருவண்ணாமலைக்கு சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டிவனம் 60 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 185 கி.மீ தொலைவில்.

14.10.10

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் - Thiruvaanaikaaval Jambukeswarar temple.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம். 

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது. 

வரலாறு:
இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.  

ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.  மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  

இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.  25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. 

மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம். 

சிறப்பு:

இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது. 


அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.  முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார். 


தல புராணம்:
இங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது. 

பின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.

சிற்பக்கலை:
இங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும். 




விழாக்கள்:
மற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.  மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன. 



கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 



தொடர்புக்கு - 91-0431-2230257





எப்படி செல்வது?


1)திருவானைக்காவலுக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திருச்சி 5 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி (விமான நிலையம் திருச்சி நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது)
.

7.10.10

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் - Kanchipuram Ekambareswarar Temple

ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 


இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. 



மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.


வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.  மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது. 


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 


ஸ்தலவிருட்சம்: 
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 


தலவரலாறு: 
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர். 


சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு. 


விழாக்கள்: 
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. 


கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. 


3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
.

2.10.10

சிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Temple

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். 


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே. 


மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும். 


 1) சிதம்பரம் - கனகசபை
 2) திருவாலங்காடு - இரத்தினசபை
 3) மதுரை - வெள்ளிசபை
 4) திருநெல்வேலி - தாமிரசபை
 5) திருக்குற்றாலம் - சித்திரசபை.


இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.


சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.


கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.  இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.


ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.


தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.


நிருத்தசபை  - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.


இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.


கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன. 


மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம். 


மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு.  500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 


திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன. 


தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.  


1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்


2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,


3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்


4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,


5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.


6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.


எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.


3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில். 

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator