1.7.12

பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge

தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ. 




பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், 1912ல் கட்டிமுடிக்கப்பட்டு, தென்னக இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தென்னக இரயில்வே இந்தப் பாலத்தில் சிறிய ரக ரயில்கள் செல்வதிற்கு ஏதுவாக குறுகிய தண்டவாளங்கள் அமைத்தது.


முதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது. 



இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட அழைக்கலாம். ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும், இதனை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் இது. இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000 டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை  கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன.பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை  கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. 




சில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர்...பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.


1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது கூட இந்தப் பாலத்தின் இரும்பு பகுதி சேதமடையவில்லை, ஆனால் பாலத்தின் மற்ற பகுதிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து சில காலம் தடைப்பட்டது. பின்னர் 45 நாட்களில் பாலம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 


இந்த ரயில் பாலத்திற்கு அருகிலேயே தரைப் பாலமும் உள்ளது. 1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்துவைத்தார். இந்த பாலத்தில் இருந்து பார்த்தால் அருகில் உள்ள இரயில் பாலமும், இராமேஸ்வரத்தில் உள்ள சில தீவுகளும் தெரியும்.




பாம்பன் பாலத்தின் வழியாக செல்லும் ரயில்கள்:
16713 - Rameswaram exp
16701 - Rameswaram exp

12.2.12

திருவெண்காடு புதன் கோவில் - Thiruvenkadu Boothan Temple.

கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.  இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.


சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு. 


இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன. 

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது. 


திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம். 


நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.

புதனுக்கு உகந்தவை:



ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

எப்படி செல்வது?

இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

  • கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 96 கி.மீ தொலைவில்.

10.1.12

ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் - Alangudi Guru Temple

நவக்கிரக கோவில்களில் குரு பகவானுக்கு ஏற்ற கோவில் ஆலங்குடி ஆகும். இக்கோவிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும் - ஏலவார்குழலம்மையும் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார்.




தல வரலாறு:
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.


ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். 


தல சிறப்பு - கட்டிடக்கலை:
தேவார பாடல் பெற்ற தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் ”நச்சித் தொழுவீர்கள்...” என்று பதிகம் பாடினார். விசுவாமித்திரர்,  முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில். 




இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. மேலும் இக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் கலையம்சம் மிக்க சிற்பங்களை காணலாம். இங்கு கோவிலைச் சுற்றி அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் அமைந்துள்ளது.


குரு பகவானுக்கு உகந்தவை:

ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

காயத்ரி மந்திரம்:

விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
விழாக்கள்:
ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எப்படி செல்வது?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.
  • கும்பகோணத்தில் இருந்து இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம், 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator