28.3.10

சாந்தோம் தேவாலயம் - Santhome Church



சென்னையில் அமைந்துள்ள புகழ் பெற்ற தேவாலயம்தான் இந்த சாந்தோம் தேவாலயம். ஆங்கிலத்தில் சாந்தோம் பெசிலிகா என்றும் அழைக்கப்படுகிற இந்த தேவாலயம் ஓர் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். சரி இதன் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.


இந்த தேவாலயம் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. பெசிலிகா என்பது ஒரு லத்தீன் சொல்லாகும். பெசிலிகா என்னும் சொல் முன்னர் ரோமில் உள்ள பொது கட்டிடங்களை குறிக்கும். மேஜர் பெசிலிகா, மைனர் பெசிலிகா போன்ற பல வகையான பெசிலிகாக்கள் உள்ளது. இந்த சாந்தோம் தேவாலயம் மைனர் பெசிலிகா வகையைச் சேர்ந்தது. பின்னர் 1893 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களால் புதுப்பிக்கப்பட்டு கதீட்ரல் போல கட்டப்பட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் கட்டிட பொறியாளர்களால் புது கோதிக்(new-gothic) வகையில் மாற்றப்பட்டது.


கோதிக் என்பது ரோமானியக் கட்டிடக் கலையாகும். இந்தக் கட்டிடக் கலை 12ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து உருவானது. பெரும்பாலும் தேவாலயங்கள் அனைத்தும் இதைப் பின்பற்றியே கட்டப்படுகின்றன.


கிறித்துவ வரலாற்றின் படி இயேசுவின் சீடரான St.Thomas என்பவர் பாலஸ்தீனத்தில் இருந்து புறப்பட்டு கி.பி 52ஆம் ஆண்டு கேரளா வந்தார். கி.பி 72ஆம் ஆண்டு வரை இயேசுவின் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் இப்போது சென்னையில் உள்ள St.Thomas Mount என்னும் இடத்தில் கொல்லப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், அவர் உடற்கூற்றை எடுத்துவந்து இந்த தேவாலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.


1956ஆம் ஆண்டு போப்பாக இருந்த பயஸ் XII, இதை மைனர் பெசிலிகா என்னும் நிலைக்கு உயர்த்தினார். பின்னர் 11, பிப்ரவரி 2006 அன்று இந்த தேவாலயம் தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டது.  மக்கள் பார்வையிட இந்த தேவலாயத்தில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.


சென்னையில் வசிக்கும் கிறித்துவர்கள் அனைவருக்கும் இது ஓர் சிறந்த தேவலாயமாகும். வருடப் பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற கிறிஸ்தவர்களின் பல முக்கியமான திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவாலயம் சென்னையின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. நீங்களும் போய் வாருங்கள்.


மேலும் விபரங்கள் - பெசிலிகா , கோதிக் கட்டிடக் கலை.


எப்படி செல்வது?
1) சென்னைக்கு தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2) சென்னையில் பல ரயில் நிலையங்கள் உள்ளது


3) சென்னையில் விமான நிலையமும் உள்ளது.


நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

24.3.10

குற்றால அருவிகள் - kutralam falls

குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு.  இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம்.


குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது.  குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி!  மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த அருவி பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும் இந்த அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள்.  தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது. என்னதான் நாம் ஜூன் முதல் செப்டம்பர் வரை குற்றால சீசன் என்று கணித்தாலும் சில வருடங்கள் இயற்கை மாற்றத்தால் சீசன் நேரம் மாறுபடுகிறது. என்ன செய்வது, இயற்கையை மாற்ற முடியாது.  


குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.  இந்த ஒன்பது அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்படவேண்டாம். நமக்கு உதவ ஆட்டோக்கள் இருகின்றன. காலை தென்காசி அடைந்தவுடன், ஒரு காபி சாப்பிட்டு, எதாவது ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துவிட்டால் போதும், அனைத்து அருவிகளுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு உங்களை உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். (வீட்டுக்கெல்லாம் கொண்டுபோய் விடமாட்டங்க! நீங்க குற்றாலத்துல தங்குற இடத்துல கொண்டுபோய் விடுவாங்க)


குற்றாலத்தின் அழகை ரசித்து குளிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வேண்டும். குளிக்கிறதுக்கு 
இரண்டு நாள் வேணுமானு கேட்காதீங்க!  வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம,  ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா,  உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா? இந்த சுகத்தை எங்கெல்லாம் அனுபவிக்கலாமுன்னு பாப்போம்..


பேரருவி..
குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீர், தனது கவர்ச்சியால் சில உயிர்களைக் கூட பலிவாங்கியிருக்கிறது. பல நேரங்களில் செய்திகளில் எல்லாம் நாம் இந்த அருவியின் காட்சிகளை பார்த்திருக்கக் கூடும்.  உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது, ஆம் சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.  மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும். எனவே நீங்கள் இந்த அருவியில் குளிப்பதை அருவியே தீர்மானிக்கிறது.  அருவியே தீர்மானிக்குதுன்னா காவல் துறை தீர்மானிக்குதுன்னு அர்த்தம். இப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீர் மிக வேகமாக பாயும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் பாறையிலிருந்து பாயும்போது சில மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் சாரல் அடித்து நம் உடம்பை கூலாக்கி சந்தோஷப்படுத்தும்.


சிற்றருவி..
பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவிக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்


செண்பகாதேவி அருவி..
பேரருவிக்கு மேல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி.. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து இந்த அருவியை அடையவேண்டும். நடக்கணும், ஆட்டோ உள்ளே போகாது.. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.  இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்றாலும், காவல் துறை சொல்வதைக் கடைபிடித்தாலே நாம் இந்த அருவியில் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிக்கமுடியும். ஆனால் பல பேர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி உல்லாசமாய் குளிக்கிறேன் என்ற பேரில் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.


தேனருவி..
செண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.  மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது. 


ஐந்தருவி..
பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  திரிகூடமலையில் தோன்றி சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாக பிரிந்து பாய்கிறது.


பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி..
பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் பேரருவிபோல் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பழைய குற்றால அருவி..
தமிழகத்தில் எல்லாமே பழையது, புதியது என்று இருக்கும். உதாரணமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என்று இருப்பது போல.  இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல.  ஏனோ குற்றாலத்தையும் பழையது,புதியது என்று பிரித்து விட்டார்கள். பேரருவிதான் புதிய குற்றாலம்.  பழைய குற்றாலத்துக்கு முன்னர் அதிக அளவில் மக்கள் வந்திருக்கலாம், ஆனால் இப்போது பேரருவியில்தான் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த அருவி பேரருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேரருவி போலவே இங்கும் தண்ணீர் மிக உயரத்தில் இருந்து பாய்கிறது. கிட்டத்தட்ட பேரருவிபோலேயெ இருக்கிறது இந்த அருவி.


குளித்து முடித்து வந்தால் மிகவும் பசியெடுக்கும் என்பதை புரிந்து கொண்டு பல அருவிகளில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகம் நடைபெறுகிறது. குளித்து முடித்து பஜ்ஜி, சொஜ்ஜி என பலவற்றை வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு பின்னாளில் அவதிப்படாதீர்கள். குளித்தவுடன் ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு போய் படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.


தண்ணீர் அருவிகளில் சீசன் நேரங்களில் எந்நேரமும் பாய்வதால், சீசன் காலங்களில் இரவு 12 மணிக்கூட மக்கள் குளிக்கத் தயங்குவதில்லை. மது அருந்தி தண்ணீரில் குளிக்கும் இளைஞர் கூட்டமே இரவு நேரங்களில் காணப்படும், சில நேரங்களில் காலை நேரத்தில் இவர்களின் உயிரற்ற உடல்களே கிடைக்கும்.  குற்றாலத்தில் அதிகம் பலியாவது இளைஞர்களே! இவர்களின் உடல்களை கண்டெடுப்பதையே ஒரு தொழிலாக செய்துவருகிறார் குற்றாலத்தில் இருக்கும் கண்ணன் என்பவர். உயிர்கள் பலியாவது ஒருவருக்கு வேலை அளித்திருக்கிறது, என்ன உலகம் இது!


குற்றாலம் போனால் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள், காவல் துறை சொல்வதை கொஞ்சமாவது கேளுங்கள். உங்களின் உயிர் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.  


எப்படி போவது?
1)குற்றாலத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - தென்காசி 6 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 200 கி.மீ தொலைவில்

18.3.10

மகாபலிபுரம் பாகம் 2 - Mahabalipuram 2

போன பதிவின் தொடர்ச்சி...


வாங்க! நல்லா சாப்டீங்களா?


சாப்பிட்டாச்சு!  இப்ப என்ன பார்க்கப் போறோம்!


கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!


இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.


சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?

ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.


மேல சொல்லுங்க!



இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.


கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!


ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..


சரி, சரி அடுத்து எங்க?


வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.


மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?


மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.


வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.


இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?


நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.


உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?


ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.


இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.


இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.


எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம். 



புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..


புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.



அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.


இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க.  பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.


சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.


அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.


பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான், 
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.


ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.


என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..


குறிப்பு :  இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. 


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் :  செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்


Tourist Office in Mamallapuram:
Kancheepuram District,
Mamallapuram - 603 104.
Ph: 04114 - 242232
.



திசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டியத் திருவிழாவும் நடைபெறும். கிளம்புங்க மாமல்லபுரத்துக்கு...




.

14.3.10

மாமல்லபுரம் - Mamallapuram

இந்த பதிவில் சுற்றுலாப் பயணியும், வழிகாட்டியும் பேசிக்கொள்வது போல் உங்களுக்கு மாமல்லபுரத்தைப் பற்றி கூறப் போகிறேன்.  இனி அவர்கள் பேச்சை கவனிப்போம்.


வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?


நிச்சயமாக.  அதுதான் எனது வேலையே.  வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?


மதுரைலேந்து.  பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.


சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.


இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?


இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.


மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.


மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில்,  குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.


இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது.  முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.


எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?


இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.


அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?


வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு.  முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது. 


நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?


இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்கள்.


சரி ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு வந்து மற்ற இடங்களை பார்க்கலாம்.


உங்க இஷ்டம். சாப்பிட்டு சீக்கிரம் வந்துடுங்க.


அவர்கள் சாப்பிட்டு வரும் வரை நீங்களும் காத்திருங்கள், மகாபலிபுரத்தைப் பற்றிய அடுத்த பதிவுக்காக.


.

9.3.10

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு - பாகம் 2

போன பதிவின் தொடர்ச்சியை இந்த இடுகையிலும் காண்போம். இந்த இடுகையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.


1) சுற்றுலாத் துறையும் நமது சுற்றுலாவில் பங்கெடுக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் தமிழக சுற்றுலாத் துறையின் இணைய தளத்தை அணுகலாம்.  இந்த தளத்தில் பிரபலாமான சுற்றுலாத் தளங்களைப் வீட்டில் இருந்தே பார்வையிட வசதியாக virtual tour  என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இந்த தளத்தில் நமக்குத் தேவையான அனைத்து தகவல்கள்,  அரசின் சுற்றுலா தொடர்பான சேவைகள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.


2) சரி. நாம் பெரும்பாலும் நமக்குப் பழக்கப்படாத இடங்களுக்கே சுற்றுலா செல்வோம். அது மாதிரியான நேரங்களில் அங்கு இருக்கும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அந்த இடத்தைப் பற்றி கேட்டறிய வேண்டும்.  அப்படி யாரும் இல்லையென்றால் மேலே சொன்னது போல பல இணைய தளங்கள் நமக்கு உதவ காத்திருக்கின்றன. இது போன்று அறிந்து கொள்வதால் அந்த இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும், சுற்றுலாவும் சுவாரசியமானதாக இருக்கும்.


3) அப்புறம் நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று, ரயிலில் சென்றால் மற்றவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள். முக்கியாமாக பிஸ்கெட் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இப்போது திருடர்கள் வேறு ஏதாவது வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள்.  இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருங்கள். வருமுன் காப்போம்.


4) ஜாக்கிரதை - சில சுற்றுலாத் தளங்களில் உங்களை மகிழ்விக்க சில அபாயகரமான(த்ரில்லான) விளையாட்டுகள் இருக்கும். உதாரணமாக paragliding, motorboat, roller coster போன்றவை.  இது போன்றவைகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறவில்லை, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் - உயிர் மேல் ஆசையிருந்தால்.


5) சரணாலயங்கள், வனவிலங்கு பூங்காக்களும் நம் சுற்றுலாவில் இடம்பெற வாய்ப்புண்டு.  அது போன்ற இடங்களுக்கு செல்லும் போது விலங்குகளிடம் உங்கள் குறும்பை காட்டாதீர்கள். அவையும் உயிரினங்கள் தான், பேச முடியா உயிரினங்கள். அழிவில் இருக்கும் பல விலங்குகள் சரணாலயங்களில்தான் பெரிதும் காணப்படுகின்றன. பல வேலைகளுக்காக அவைகளைச் சார்ந்திருக்கும் நாம் அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்


முக்கிய்மாக சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள், உங்கள் ஓட்டையும் எனக்காக பதிவு செய்யுங்கள்.


.

6.3.10

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு

மார்ச் மாதம் தொடங்கியாச்சு! லீவு விட்டாச்சு! சுற்றுலா செல்ல அனைவரும் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுக்காகவே இந்த இடுகையை எழுதுகிறேன். சுற்றுலா செல்லப்போகும் அனைவருக்கும் இந்த இடுகை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 


1)  தமிழகத்தைப் பொறுத்தவரை வெயில் நம்மளை வாட்டி எடுக்கப் போகிறது. எனவே பெரும்பாலும் மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிரான இடங்களையும் தண்ணீர் அதிகம் இருக்கும் இடங்களுக்கும் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.  இந்த இடங்களுக்குச் செல்ல இப்போது டிக்கெட் கிடைப்பதெல்லாம் மிகவும் சிரமம். நீங்களும் இது போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் இப்போதே முன்பதிவு செய்துவிடுங்கள். 


2)  என்னைப் பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பேர் சுற்றுலா செல்வதற்கு பதிலாக ஒரு கூட்டமாக செல்வதே நல்லது. கூட்டமாக செல்வது நமக்கு பாதுகாப்பு தருவதோடு மட்டுமல்லாமல் சில செலவுகள் குறையும். மேலும் நம் உறவினர்களோடு வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களை அனுபவிக்கவும் முடியும். என்ன சில செலவுகள் கூடும், அதையெல்லாம் பார்த்தால் முடியுமா! குடும்பத்தோடு சந்தோஷமாக போயிட்டுவாருங்கள்.


3)  நீங்கள் எங்கு சென்றாலும் சரி உங்களுக்கு ஏதாவது வியாதி இருந்தால் மருத்துவரை பார்த்துவிட்டு செல்வது மிகவும் அவசியம்.  உங்களுக்குத் தேவையான மாத்திரைகளை சுற்றுலா செல்லும் முன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் உங்கள் வீட்டுத் தண்ணீரையும் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். பல நாட்கள் சுற்றுலா செல்லப் போகிறீர்கள் என்றால் தண்ணீரை எடுத்துச் செல்வது முடியாத காரியமாகும், அச்சமயங்களில் மினரல் வாட்டரை பயன்படுத்துங்கள்.


4)  அப்புறம் நம்து சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆட்டோக்காரர்கள். அவர்களை சமாளிப்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கலை. அவர்கள் சொல்லும் விலை நாம் நினைப்பதை விட இரும்டங்காக இருக்கும். கேட்டால் டிராபிக், ஒன்வே, பெட்ரோல் விலை ஏற்றம் என்று பெரிய அறிக்கையே வாசிப்பார்கள். முடிந்தவரை அவர்களை நாம் நினைத்த விலைக்கு ஒத்துக்கொள்ளவையுங்கள். இல்லையென்றால் வேறு ஆட்டோவா இல்லை? அடுத்த ஆட்டோவை பாருங்க பாஸ்!


5)  டிராவல் ஏஜெண்ஸிஸ் - நம்மளை குறிவைத்து மிகவும் பிரமாதமாக விளம்பரம் எல்லாம் செய்வார்கள். ஆனால் போய்ப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. சில பேர் நன்றாக விளம்பரம் செய்துவிட்டு சுற்றுலாவின் போது அவர்களின் சுயரூபத்தை காட்டிவிடுவார்கள்.  சில நம்பிக்கையான டிராவல் ஏஜென்ஸிஸும் இருக்கின்றன. என்னைக் கேட்டால் பல பேரிடம் விசாரித்துவிட்டு சுற்றுலாவுக்கு புக் செய்வது நல்லது. சில ஏஜெண்டுகள் விள்ம்பரமே செய்யமாட்டார்கள், ஆனால் சுற்றுலா மிகவும் சிறப்பாக இருக்கும். நல்ல டிராவல் ஏஜெண்டுகளை கண்டுபிடிப்பது உங்கள் கையில்தான் உள்ளது.


கடைசியாக ஒரு வேண்டுகோள், சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். நம் நாட்டின் மீது வெளிநாட்டவர் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் நமது சுற்றுலாத் தளங்களின் தூய்மையில்தான் இருக்கிறது.


சரி படிச்சுட்டீங்க.  அப்படியே ஒரு ஓட்டையும் குத்திடுங்க. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


.

4.3.10

திண்டுக்கல் கோட்டை - Dindigul Fort

திண்டுக்கல்லில் அமைந்திருக்கும் கோட்டையைப் பற்றிதான் இன்று சொல்லப்போகிறேன்.   இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது.  இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.


ஒரு காலத்தில் ஹைதர் அலி தன் மனைவியையும், மகன் திப்பு சுல்தானையும் ஆங்கிலேயரிடம் இருந்து பாதுகாக்க இங்கு தான் மறைத்து வைத்திருந்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.


இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது.  இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.


இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது.  இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது.  இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.


இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.  


இங்கு எப்படி செல்வது?
1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து திண்டுக்கலுக்கு பேருந்து வசதி உண்டு.


2)திண்டுக்கலில் ரயில் நிலையம் உள்ளது.


3)அருகில் உள்ள விமான நிலையம் -  மதுரை 66 கி.மீ தொலைவில்.


இந்தக் கோட்டை archaeological survey of India வால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  முன்னர் இந்தக் கோட்டையை பல பேர் இடித்து கற்களை எடுத்துச் சென்றதால் இப்போது வேலி போட்டு பாதுகாக்கப்படுகிறது.


கட்டணம் :
இந்தியராய் உள் நுழைய : ரூ.5/-
வெளிநாட்டவராய் உள் நுழைய் : ரூ.100/-



Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator