10.1.12

ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் - Alangudi Guru Temple

நவக்கிரக கோவில்களில் குரு பகவானுக்கு ஏற்ற கோவில் ஆலங்குடி ஆகும். இக்கோவிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும் - ஏலவார்குழலம்மையும் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார்.




தல வரலாறு:
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.


ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். 


தல சிறப்பு - கட்டிடக்கலை:
தேவார பாடல் பெற்ற தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் ”நச்சித் தொழுவீர்கள்...” என்று பதிகம் பாடினார். விசுவாமித்திரர்,  முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில். 




இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. மேலும் இக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் கலையம்சம் மிக்க சிற்பங்களை காணலாம். இங்கு கோவிலைச் சுற்றி அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் அமைந்துள்ளது.


குரு பகவானுக்கு உகந்தவை:

ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

காயத்ரி மந்திரம்:

விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
விழாக்கள்:
ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எப்படி செல்வது?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.
  • கும்பகோணத்தில் இருந்து இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம், 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator