23.4.11

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanctuary

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் - அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது. 




இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.


இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 




புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.


இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன. 




இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன.  மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர். 


எப்படி செல்வது?

  • ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில். 
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம். 

19.4.11

வல்லநாடு வெளிமான் சரணாலயம் - Vallanadu Black buck Sanctuary

வல்லநாடு வெளிமான் சரணாலயம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வெளிமான்களால் பிரபலமடைந்தது. வெளிமான்கள் என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள். இந்த வகையான மான்களை தற்போது தமிழகத்தில் உள்ள நான்கு சரணாலயங்களில் மட்டுமே காணமுடியும்.




அதில் ஒன்றுதான் இந்த வல்லநாடு சரணாலயம். கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மற்ற மூன்று சரணாலயங்களிலும் வெளிமான்களை காணலாம். இந்த வல்லநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ளது. 




இந்த சரணாலாயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம்.  19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகையான வெளிமான்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டன, ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிளேயே உள்ளன. பெரும்பாலும் இந்த மான்கள் சமமான நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் சூழ்நிலை மாற்றங்களால் தற்போது காடுகளில் வசிக்கின்றன. 




இந்த வகை மான்களின் முக்கிய உணவு புல், மேலும் இவை அதிகபட்சமாக 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும். வெளிமான் மட்டுமல்லாது இந்த சரணாலயத்தில் குரங்கு,  புள்ளிமான், காட்டு பூனை, கீரிப்பிள்ளை,  கருப்பு முயல், பாம்புகள் போன்ற விலங்குகளும் இங்குள்ளன. 


மேலும் மயில், நாரை, சிட்டுக்குருவி, கழுகு, மரங்கொத்தி, குயில், மரகதப் புறா, பருந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.




தேடித்தேடி பறவைகளை புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த சரணாலயம் ஒரு நல்ல இடம். இன்னொரு தகவல்! - வருடத்தில் எந்த மாதம் நீங்கள் இங்கு சென்றாலும் வெயிலின் தாக்கத்தை உணரலாம். எனவே கோடை காலங்களில் செல்லாதீர்கள்.


எப்படி செல்வது?
  • திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு பேருந்துகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - திருநெல்வேலி, 16 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி, 25 கி.மீ தொலைவில்.

13.4.11

ஏலகிரி - Yelagiri

ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410 மீ உயரத்தில் உள்ளது.  மொத்தம் 14 சிறு கிராமங்களை உள்ளடக்கிய ஏலகிரியில் பாரா கிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடலாம்.


ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். எனவே ஏலகிரியில் சுற்றிபார்ப்பதற்கான இடங்களும் குறைவு, இருந்தாலும் மலையேற்ற பயிற்சிக்கு சிறந்த இடம் ஏலகிரி.




பூங்கானூர் ஏரி:
இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 56.7 சதுர மீட்டர். இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம்.  ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன.


Lake

Park
மூலிகை மற்றும் பழ பண்ணைகள்:
பூங்கானூர் ஏரியின் அருகே இந்த அரசு மூலிகை பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சித்த மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கிடைக்கும். மேலும் ஏலகிரியில் உள்ள அரசு பழ பண்ணையில் மலை பழங்கள் கிடைக்கும்.


வேலவன் கோவில்:
இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக விளங்குவபவர் முருகன். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இங்கு மிகப்பெரிய கடோத்கஜன் சிலையும் உள்ளது. மேலும் இங்கிருந்து ஏலகிரியின் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம். இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும். 
Velavan Temple
 தொலைநோக்கி இல்லம்:
ஏலகிரி செல்லும் வழியில் காட் ரோட்டில் அமைந்துள்ளது இந்த தொலைநோக்கி இல்லம்.  ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரியின் அழகை இங்கிருந்து காணலாம்.


ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி:
ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 30 மீ.  இந்த அருவிக்கு நேர்வழி இருந்தாலும் பலநேரங்களில் அந்த வழி மூடியே இருப்பதால், நிலவூர் கிராமத்தில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் ஒரு கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய கடவுளாக முருகப்பெருமானை வழிபடுகின்றனர். 


மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.






வைனு பொப்பு வானிலை ஆய்வுக்கூடம்:(Vainu poppu solar observatory)
ஏலகிரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆய்வுக்கூடம். இந்த மிகப்பெரிய ஆய்வுக்கூடம் கவலூர் என்னும் இடத்தில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடத்தை சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை காணலாம். 


விழாக்கள் - கோடை காலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழா நடத்தப்படும்.


எப்படி செல்வது?

  • ஏலகிரிக்கு வேலூர், சென்னை, ஜோலார்பேட், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - ஜோலார்பேட், 19 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - பெங்களூர், 160 கி.மீ தொலைவில்.

9.4.11

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி - பகுதி 2 - kodaikanal.

முந்தைய பதிவில் கொடைக்கானலில் உள்ள சில இடங்களை பற்றி கூறியிருந்தேன். இந்தப் பதிவில் மீதமுள்ள இடங்களைக் காணலாம்.


தலையர் நீர்வீழ்ச்சி:
      இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.


Thalaiyar falls
குணா குகைகள்:
      கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 


Guna caves
Pine forest:
      இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.


Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls):
        கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


Bear shola falls
Kodaikanal solar observatory:
         கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார். 


Solar observatory
திறந்திருக்கும் நேரம் 

  • காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
  • சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
        இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
Pillar rocks
பாம்பர் அருவி:
         இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
Pambar falls
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:
       1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 
      12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.
Kurinji Andavar Temple
செண்பகனூர் அருங்காட்சியகம்:
           இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும். 


Shenbaganur Museum
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.

செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை

எப்படி செல்வது?
  • கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில்
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில். 

ஊட்டி கோடை விழா - 2011

ஊட்டியில் மே 7 முதல் கோடை விழா தொடங்குகிறது.  அதற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு கண்காட்சிகள் நடக்கவுள்ளன. அந்த விபரங்களை கீழே காணலாம்.


தேதி இடம் நிகழ்ச்சி
மே 7, 8 ஊட்டி ரோஜா பூங்கா ரோஜா கண்காட்சி
மே 8 - மே 16 ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கு கலை நிகழ்ச்சிகள்
மே 14, 15 கோத்தகிரி நேரு பூங்கா காய்கறி கண்காட்சி
மே 14 - மே 23 தோட்டக்கலைத் துறை விற்பனை வளாகம் புகைப்படக் கண்காட்சி
மே 17 ஊட்டி படகு இல்லம் படகு போட்டி
மே 18 ஊட்டி படகு இல்லம் படகு அலங்கார போட்டி
மே 20, 21, 22 ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி
மே 23 கூடலூர் திரவிய கண்காட்சி
மே 28, 29 குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி

ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

3.4.11

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி - kodaikanal

மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Click to enlarge map
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.


வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


Silver Falls
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.


Kodaikanal Lake
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.


150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.  


வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).


Coaker's walk




டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. 


இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம்   எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.


Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide point
அடுத்த பதிவிலும் கொடைக்கானல் தொடரும்..
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator