23.4.11

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanctuary

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் - அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது. 




இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.


இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 




புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.


இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன. 




இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன.  மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர். 


எப்படி செல்வது?

  • ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 78 கி.மீ தொலைவில். 
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம். 

19.4.11

வல்லநாடு வெளிமான் சரணாலயம் - Vallanadu Black buck Sanctuary

வல்லநாடு வெளிமான் சரணாலயம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வெளிமான்களால் பிரபலமடைந்தது. வெளிமான்கள் என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள். இந்த வகையான மான்களை தற்போது தமிழகத்தில் உள்ள நான்கு சரணாலயங்களில் மட்டுமே காணமுடியும்.




அதில் ஒன்றுதான் இந்த வல்லநாடு சரணாலயம். கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மற்ற மூன்று சரணாலயங்களிலும் வெளிமான்களை காணலாம். இந்த வல்லநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ளது. 




இந்த சரணாலாயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம்.  19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகையான வெளிமான்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டன, ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிளேயே உள்ளன. பெரும்பாலும் இந்த மான்கள் சமமான நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் சூழ்நிலை மாற்றங்களால் தற்போது காடுகளில் வசிக்கின்றன. 




இந்த வகை மான்களின் முக்கிய உணவு புல், மேலும் இவை அதிகபட்சமாக 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும். வெளிமான் மட்டுமல்லாது இந்த சரணாலயத்தில் குரங்கு,  புள்ளிமான், காட்டு பூனை, கீரிப்பிள்ளை,  கருப்பு முயல், பாம்புகள் போன்ற விலங்குகளும் இங்குள்ளன. 


மேலும் மயில், நாரை, சிட்டுக்குருவி, கழுகு, மரங்கொத்தி, குயில், மரகதப் புறா, பருந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.




தேடித்தேடி பறவைகளை புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த சரணாலயம் ஒரு நல்ல இடம். இன்னொரு தகவல்! - வருடத்தில் எந்த மாதம் நீங்கள் இங்கு சென்றாலும் வெயிலின் தாக்கத்தை உணரலாம். எனவே கோடை காலங்களில் செல்லாதீர்கள்.


எப்படி செல்வது?
  • திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு பேருந்துகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - திருநெல்வேலி, 16 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி, 25 கி.மீ தொலைவில்.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator