நவக்கிரக கோவில்களில் குரு பகவானுக்கு ஏற்ற கோவில் ஆலங்குடி ஆகும். இக்கோவிலின் மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும் - ஏலவார்குழலம்மையும் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் உள்ள மூலவர் சுயம்பு மூலவராவார்.
தல வரலாறு:
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.
ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
தல சிறப்பு - கட்டிடக்கலை:
தேவார பாடல் பெற்ற தலங்களில் இந்தக்கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் ”நச்சித் தொழுவீர்கள்...” என்று பதிகம் பாடினார். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில்.
இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. மேலும் இக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் கலையம்சம் மிக்க சிற்பங்களை காணலாம். இங்கு கோவிலைச் சுற்றி அமிர்தபுஷ்கரிணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் அமைந்துள்ளது.
குரு பகவானுக்கு உகந்தவை:
ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி
காயத்ரி மந்திரம்:
விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
விழாக்கள்:
ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
எப்படி செல்வது?
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.
- கும்பகோணத்தில் இருந்து இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம், 18 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி.
நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர் ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள சிவபெருமானின் இடது கண்ணாக விளங்குபவர் சந்திரன்.
வரலாறு - கட்டிடக்கலை:
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலா வெளிச்சம் இங்குள்ள சிவலிங்கம் மேல் படும்.
தல புராணம்:
திங்களூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறாகும்.
சந்திரனுக்கு உகந்தவை:
ராசி : கடக ராசி
அதி தேவதை : நீர்
நிறம் : வெண்மை
தானியம் : நெல், பச்சரிசி
வாகனம் : வெள்ளை குதிரை
உலோகம் : ஈயம்
மலர் : அல்லி
ரத்தினம் : முத்து
ஸ்தல விருட்சம் : வில்வமரம்
காயத்ரி மந்திரம்:
பத்ம த்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சோம: ப்ரசோதயாத்.
வழிபடும் முறை:
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்சித்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம்.
பெளர்ணமி அன்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 04362-262499
எப்படி செல்வது?
- திங்களூருக்கு திருவையாருக்கு அருகில் உள்ள திருப்பழனம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 36 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 126 கி.மீ தொலைவில்.