9.4.10

சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!!

பல பேர் சுற்றுலா என்றால் பொழுதுபோக்கு மட்டுமே என்று தவறாக புரிந்துகொள்கின்றனர்.  ஏன் நீங்கள் கூட அப்படி நினைக்கலாம்.  என்னைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, நம் அறிவை ஜாலியாக வளர்த்துக்கொள்ள ஒரு கருவி, நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்ல நம் ஒவ்வொருவரின் பங்கு. அதை எப்படி சாத்தியமாக்குவது என்ற கேள்விகளுக்கு விடையே இந்தப் பதிவு.

சுற்றுலா என்றால் மூட்டையை கட்டினோமா! ஊட்டி, கொடைக்கானல் என்று எங்காவது கிளம்பினோமா! விடுமுறையை உல்லாசாமாய் களித்தோமா! என்று மட்டுமே இருக்கும் நாம் அந்த இடத்தின் வரலாற்றை, சிறப்பை, அதிசயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.  எங்கு தங்கும் விடுதிகள் இருக்கிறது?, எங்கு நல்ல உணவு விடுதி இருக்கிறது?, எந்த இடத்தில் பொழுதைக் களிக்கலாம்?, எப்படி செல்லலாம்? என்றெல்லாம் சுற்றுலா செல்லும் முன்னர் தெரிந்துகொள்ளும் நாம் அந்த இடம் எப்படி உருவானது, யார் அதை உருவாக்கினார்கள், அதில் இருக்கும் அறிவியல் நுணுக்கங்கள் போன்ற பலவற்றை அறிய முற்படுவதில்லை. ஏனெனில் வேலைப் பளுவால் களைத்து போயிருக்கும் நாம், நம்மை உற்சாகப்படுத்திக்கொள்ளவே சுற்றுலா செல்கிறோம், புத்துணர்ச்சி பெறுகிறோம். இந்த நேரத்திலும் நம் மூளைக்கு கொஞ்சம் தீனி போட நாம் விரும்புவதில்லை. சுற்றுலா என்பது சந்தோஷமாய் இருக்க மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றல்ல! பல பேர் இது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினாலும், நிறைய பேர் இது போன்ற தகவல்களை அறிய கொஞ்சமும் விருப்பப்படுவதில்லை. அப்படியாவது அறிவை வளர்க்கலாமே!! என்ற எண்ணம் பல பேருக்கு இருக்காது. ஏன் நீங்களே அறிவை வளர்த்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்கலாம். அதுக்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. இல்லையெனில் நீங்கள் இதுபோன்ற விஷயங்களை அறிய ஆர்வம் காட்டியிருக்கலாம், ஆனால் உங்களுக்கு நேரம் இருந்திருக்க்காது. இதுவரை நீங்கள் பல தகவல்களை அறிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம், இனிமேலாவது பல தகவல்களை அறிய ஆர்வமாவது காட்டுங்கள், பல தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! அறிவை வளர்க்கும் கருவி.

தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனையோ சுற்றுலாத் தளங்கள் இருந்தாலும், கோடை விடுமுறையின் போது நாம் அனைவரும் ஊட்டியையும், கொடைக்கானலையும் மட்டுமே நாடுகிறோம்.  எனக்குத் தெரிந்த சிலர் வருடம் தவராமல் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் செல்வதுண்டு. இப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தையே நாடுவதால் அந்த இடம் மிகப்பிரபலமான சுற்றுலாத் தளமாகிறது. அப்படி ஆன பின் அங்கு முதலில் ஏற்படுவது ஜனப்பெருக்கம். நிறைய கட்டிடங்கள் உருவாகும், பின்னர் ரியல் எஸ்டேட் சந்தை மிகுந்த லாபம் பார்க்கும். இதனால் ஒரு வகையில் பல பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டாலும், கூர்ந்து கவனித்தால் அந்த இடம் அதன் தூய்மையையும், உண்மை நிலையையும் இழக்கும்.  அதுதான் தற்போது ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் நடக்கிறது.  முன்னர் கோடை காலங்களிலும் இந்த மலைப்பிரதேசங்களில், மிகவும் குளுமையாக இருக்கும்.  இது போன்ற பல மாற்றங்களால் அங்கு இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு, கட்டிடங்கள் உருவான காரணத்தால், தற்போது இந்த மலைப்பிரதேசங்களும் சூரியனின் தாக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றன.  இப்படி சுற்றுலா என்ற பெயரில் நாம் இயற்கை அன்னை நமக்களித்த வரங்களை அழித்து நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். சென்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் செல்லமால் புதிய இடங்களுக்கு நாம் செல்வதன் மூலம் இயற்கை அழிவைத் தடுக்க முடியும். சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! இயற்கையை அழிக்கும் ஆயுதம்.

சரி! இப்படி பல இடங்களுக்குச் செல்லும் நாம் அந்த இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்கிறோமா? என்றால் அதுவும் இல்லை. சுற்றுலாப் பகுதிகள் மட்டுமல்ல, நம் வீட்டுத் தெருவைக் கூட சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. வெளிநாட்டுக்குச் சென்றால் மட்டும், இங்க பாரு ரோட்ட எவ்வளவு சுத்தமாக வைச்சிருக்காங்க? என்ற கேள்வியை மட்டும் எழுப்புகிறோம்.  அங்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்களின் ஒத்துழைப்பு இருப்பதால் மட்டுமே நாடு தூய்மையாக இருக்கிறது என்பதை நாம் நினைப்பதில்லை. எவ்வளவு காலம் தான் நாமும் அரசாங்கத்தின் மேலயே குறை கூறிக்கொண்டு இருப்பது. நம் நாட்டு அரசாங்கம் நம் மேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காததால் நாம் இவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். சுற்றுலாத் தளங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். கேக்கலைன்னா பரவாயில்ல! பதில சொல்லிடறேன்.  சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதால் நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றால் எப்படி அந்நாட்டின் தூய்மையைப் பற்றி புகழ்கிறீர்களோ... அது போல நமது நாட்டுச் சுற்றுலாத் தளங்களைக் காணவரும் வெளிநாட்டவரும் நம் நாட்டை புகழக்கூடும். இதனால் சுற்றுலாத் துறை வளர்சியடையும். 
 
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாகவும் இருக்க வேண்டும். நமது அரசாங்கம் நாட்டை தூய்மையாக்க ஒன்றும் செய்யவில்லை என்றாலும் நாமாவது ஏதாவது செய்யலாம் அல்லவா? சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நினைவில் கொண்டு நம் நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கு கொள்ளவேண்டாமா?  சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! நாட்டை வளர்க்க நமது சிறிய பங்கு.

இப்படி சுற்றுலாவை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அறிவை வளர்க்கும் கருவியாக, இயற்கையை அழிக்கும் ஆயுதமாக, நாட்டை வளர்க்க நமது சிறிய பங்காக பார்த்தால் நமக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

ஏதோ! எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.  ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.  மேலும் சுற்றுலா சார்ந்த உங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த வலைப்பதிவு உதவும் என்பதையும் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
.

4 comments:

எஸ்.கே said...

மிக நன்றாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள். சுற்றுலா ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா!

kolly2wood.blogspot.com said...

நல்ல வலைப்பதிவு. நல்ல விளக்கங்கள்.நிறைய சுற்றுலா தொடர்கள் எழுதுங்கள். சிற்ப விளக்கங்கள்....இன்னும் நிறைய விளக்கங்களை உங்களிடமிருந்து எதிர் பார்கிறேன்.

Anbudan sundarraman said...

அருமை சகோ நன்றாக சொல்லிருக்கிங்க

Unknown said...

Supper

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator